
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் ஒன்றுதான் 'மாமனிதன்'. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா சுரேந்தர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்' ஆகிய படங்கள் பெரிய பட்ஜெட், ப்ரோமோஷன் மூலம் வெற்றி பெற்றது என்றால், அது எதுவுமின்றி பெயர் கொடுத்த படங்கள்தான் 'கடைசி விவசாயி', 'மாமனிதன்'.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியிலும், திரை விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றது. இதில் மாமனிதன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இது இவரது தயாரிப்பில் வெளியான மூன்றாவது படமாகும். பல்வேறு பிரிவுகளில் விருது வென்ற இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தனர்.
இந்த படமானது கணவன்-மனைவி மற்றும் தந்தை தனது குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் பாசம் உள்ளிட்டவை கொண்டு மையமாகக் கொண்ட குடும்ப படமாகும். இந்த படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர் என பலரும் இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியை வெகுவாக பாராட்டினர். கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் தற்போது சர்வதேச விழாவில் திரையிடப்படவுள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். அதாவது ரசியாவிலுள்ள மாஸ்கோவில் 45-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 20 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை ஒளிபரப்பு செய்யப்படும்.
Happy to share
— Seenu Ramasamy (@seenuramasamy) February 2, 2023
The Russian Government screening #Maamanithan movie in the World Cinema category at the 45th Moscow International Film Festival from April 20 to 27. #MIFF The prestigious film festival committee sent an invitation to #Maamanithan movie producer U1 @thisisysr & me pic.twitter.com/D1BWz81Zn9
அதன்படி சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான இந்த படம், இந்த விழாவில் உலக சினிமா பிரிவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இதை பகிர்வதில் மகிழ்ச்சி.. ஏப்ரல் 20 முதல் 27 வரை நடைபெறும் 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரைப்படத்தை ரஷ்ய அரசு திரையிடுகிறது. #MIFF மதிப்புமிக்க திரைப்பட விழாக்குழு 'மாமனிதன்' திரைப்பட தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும், எனக்கும் அழைப்பு விடுத்துள்ளது. " என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 'மாமனிதன்' திரைப்படம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் 'கோல்டன்' விருதைப் பெற்றுள்ளது. மேலும் பிரஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்திற்கான சிறந்த நடிகர் விருதை விஜய் சேதுபதி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update மேல் Update.. இணையத்தில் வைரலாகி வரும் T67 பூஜை வீடியோ.. யார் யார் அதில் இருக்கிறார் தெரியுமா ?