+

வெடித்த BBC ஆவணப்பட சர்ச்சை.. பகிரங்க மன்னிப்பு கேட்ட YOUTUBER மதன் கெளரி.. பின்னணி என்ன ?

featuredImage

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் சிறுபான்மையினரான இசுலாமியர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் என உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

குஜராத் கலவரத்தின் போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை இந்துத்துவா கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாக கொலை செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு, நீண்ட வருடங்களுக்கு பிறகு இது தொடர்பாக புகார் அளித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய கொடுமையான குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, கடந்த 17-ம் தேதி “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” (India : The Modi Question) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியின் உண்மை முகம் அம்பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியையும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இது தொடர்பாக விளக்கமும் கேட்டுள்ளது.v

பிபிசி வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ள ஒன்றிய அரசுக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி, "உண்மையைத் தடுக்க முடியாது.அது எப்படியும் வெளியில் வந்தே தீரும். நீங்கள் எந்த தடை விதித்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி தொடர்பான இந்த ஆவணப்படம் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் இந்த ஆவணப்படம் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டபோது பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மாணவர்கள் புகார் அளித்தனர். அதோடு டெல்லியில் இந்த ஆவண படத்தை பார்த்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பலவித கண்டனங்கள் எழுந்தது.

தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர், சில கல்லூரிகளில் இந்த ஆவண படங்களை மாணவர்கள் கண்டனர். இப்படி இந்தியாவில் பெரும் பரபரப்பாக மோடி தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பாகம் பேசப்பட்டு வரும் நிலையிலும், ஒன்றிய அரசின் தடையையும் மீறி பிபிசி இந்த ஆவணப்படத்தின் 2வது பாகத்தை கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்த இரண்டாவது பாகத்தில், இரண்டாவது முறையாக மோடி பிரதமரானது, மனித உரிமை அமைப்பை முடக்கியது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற முக்கிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. பிபிசியின் இந்த ஆவணப்பட விவகாரத்தில் பலரும் பல வித கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல ஊடகங்களும் இதனை செய்திகளாக பதிவேற்றி வருகிறது. அதோடு சமூக ஊடக பயனர்களும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் அநீதி என்றும், உண்மையை மறைக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல Youtuber ஆன மதன் கெளரி, பிபிசி ஆவணப்பட சர்ச்சை குறித்து வீடியோ ஒன்றை தனது Youtube பக்கத்தில் அவரே பேசி பதிவேற்றி இருந்தார். அந்த வீடியோவில் முழு கதைகளையும் பேசிய அவர் சில வார்த்தைகளையும் தனது சொந்த கருத்து என்று கூறிவிட்டார். அதுவே அவருக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

அதாவது அவர் பேசிய விடீயோவில், "என்னை பொறுத்தவரை தனிப்பட்ட கருத்து என்னவென்றால், நம் வீட்டில் அப்பா - அம்மாவிற்குள் ஏதேனும் தகராறு என்றால், அது அவர்கள்தான் சரி செய்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மூன்றாவதாக வேறொரு வீட்டில் இருந்து வந்த ஒருவர் சொன்னால் அது நமக்கு அழகல்ல.

அதேபோல்தான் நம் நாட்டிற்குள் நடக்கும் பிரச்னையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நீதிமன்றம் உள்ளிட்ட அதிக வழிகள் உள்ளது. ஆனால் அதனை வேறு ஒரு நாட்டிலுள்ளவர்கள் குற்றம் சொல்ல அனுமதிக்க கூடாது. இது என்னுடைய கருத்து" என்றார்.

இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். அதோடு அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாகவும் குற்றம் சுமத்தினர். இதனால் அவருக்கு சில பின்தொடர்புவர்கள் (followers) குறைந்ததாக காணப்படுகிறது. தொடர்ந்து அவரது பேச்சு நெட்டிசன்கள் மத்தியிலும் கன்டென்ட் ஆக மாறத்தொடங்கியது.

இதனால் மதன் கெளரி தனது ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இனி வருங்காலங்களில் கவனமாக பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "நான் வெளியிட்ட ஒரு வீடியோ என்னைப் பின்தொடர்பவர்கள் பலரை காயப்படுத்தியிருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் எல்லா கருத்துகளையும் படித்தேன்.

தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த வீடியோ அகற்றப்படும். எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன். Love you all" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவை அடுத்து, பதிவேற்றப்பட்ட வீடியோவும் அகற்றப்பட்டது. எனினும் மதன் கெளரி அப்படி பேசியதற்கு இன்னும் பலரும் பலவித கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

BBC ஆவணப்பட தடை.. நீட்.. அதானி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப DMK MP-க்களுக்கு முதல்வர் கொடுத்த உத்தரவு!
அரசியல் :
×
facebook twitter