+

“காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துக்கு எதிராக.. பாஜகவை கதி கலங்க வைத்த ராகுலின் வெற்றிப் பயணம்”: முரசொலி !

featuredImage

ராகுலின் வெற்றிப் பயணம்!

மொத்தம் 137 நாட்கள், 3,800 கிலோ மீட்டர் தூரம், 14 மாநிலங்கள், 72 மாவட்டங்கள் எனப் பயணம் செய்துள்ளார் ராகுல் காந்தி. குமரி முனையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். வெள்ளிப்பனிமலையாம் ஜம்முவில் இருந்து 12 கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள். 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்பது இந்தியாவில் உண்மையில் ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒற்றுமையை மட்டுமல்ல, கட்சிகளின் ஒற்றுமையையும் சேர்த்து ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தக் கட்சி வரவில்லை, இந்தக் கட்சி வரவில்லை என்று ராகுலிடம் கேட்கிறார்கள். 'எல்லா எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஒன்று சேரும்' என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ராகுல்காந்தி. இது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரின், காங்கிரஸ் கட்சிப் பயணமாக அமையவில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காப்பாற்றுவதற்காக - இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதற்கான பயணமாகத்தான் ராகுல் காந்தி சொன்னார்.

“நான் எனக்காகவோ, காங்கிரசு கட்சிக்காகவோ, காங்கிரசின் வளர்ச்சிக்காகவோ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்களின் வாழ்வில் வளம் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்” என்று சொல்லி இருக்கிறார். அதே போல் கட்சியின் செல்வாக்கைக் காட்டவும் இதனை அவர் நடத்த வில்லை. அப்படி நடத்தி இருந்தால் கட்சித் தொண்டர்களை முழுமையாக வரவழைத்திருப்பார். அப்படி அழைக்கவில்லை.

குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவர்களை மட்டுமே அழைத்துச் சென்றார். தொண்டர்களை அவர் அழைத்துச் செல்லவில்லை. ஆனால் அவரைப் பார்க்க இருபக்கமும் கூட்டம் அதிகமாகக் கூடியது. இதனை பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை. மக்கள் கூட்டம் அதிகம் ஆனதும், 'நாட்டில் கொரோனா அதிகம் பரவத் தொடங்குகிறது' என்று பீதியைக் கிளப்பினார்கள்.

சீனாவில் இருந்து மீண்டும் பரவி வருவதாக வதந்தி பரப்பினார்கள். இதனால் ராகுல் பயணத்தை தடை செய்யப் பார்த்தார்கள். இதனை மக்கள் நம்பவில்லை. ராகுலின் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. அதன்பிறகு சரியான பாதுகாப்புத் தராமல் சுணக்கம் காட்டினார்கள். காஷ்மீரில் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே இருக்க வேண்டிய காவலர்களைத் திடீரென்று காணவில்லை.

ராகுல்காந்தியைப் பார்க்க வந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டுவருவதைத் தடுக்க காவலர்கள் யாருமே இல்லை. 'சுமார் அரைமணி நேரம் எந்தப் பாதுகாவலரும் இல்லாமல் ராகுல் இருந்தார். இதற்கு நானே நேரடி சாட்சி' என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா சொல்லி இருந்தார். இந்த நிலையில் நடைபயணத்தை அன்றைய தினம் ரத்து செய்ய வேண்டியதாக இருந்தது. மறுநாள் மீண்டும் பயணம் தொடர்ந்தது.

ராகுல் காந்திக்குத் திரண்ட கூட்டம், பா.ஜ.க.வை தூங்கவிடாமல் செய்தது. ராகுல் பேசிய அரசியல், பா.ஜ.க.வுக்கு அச்சம் தருவதாக அமைந்திருந்தது. “இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம்" என்று ராகுல் சொல்லி வந்தார். எனவே, அவரால் பா.ஜ.க.வை விட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

மோடியை விட, சாவர்க்கர் அதிகமாக அவரால் விமர்சிக்கப்பட்டார். 'காந்தியும் நேருவும் படேலும் சிறையில் இருந்தார்கள். ஆனால் சாவர்க்கர் போல மன்னிப்புக் கடிதம் எழுதித் தரவில்லை' என்று ராகுல் சொன்னார். இதனை திரும்பப் பெற மாட்டேன் என்றார் ராகுல். காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துக்கு எதிராக நமது போராட்டம் தொடரும் என்றார் ராகுல். இது அவரது முதல் குண்டு.

இதைப் பார்த்து பா.ஜ.க. எந்தளவுக்குப் பயந்து போயிருக்கிறது என்றால் அண்மையில் நடந்த கட்சி செயற்குழுவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களிடமும் நாம் பேசியாக வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்.

டெல்லியில் முக்கியமான முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முஸ்லிம் வாக்குகளைப் பெற பா.ஜ.க. ஆர்வம் செலுத்தத் தொடங்கி இருப்பதாக ('இந்து தமிழ் திசை' -- 31.1.2023) நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை திரிபுரா தேர்தலில் நிறுத்தியதும் இதனால்தான் என்கிறது இந்த செய்தி. ராகுலின் நடைபயணம், பா.ஜ.க. வட்டாரத்தை எந்தளவுக்கு கதி கலங்க வைத்துள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

ராகுல் இன்னொரு குற்றச்சாட்டையும் தொடர்ந்து வைத்து வந்தார். "ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து எடுத்து தனது நண்பர்களை பணக்காரர்களாக ஆக்குவதே பிரதமரின் ஒரே பணியாகும்.

ஆளும் பா.ஜ. கட்சி இரண்டு இந்தியாவை உருவாக்குகிறது. ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழைகளுக்கானது. தனது நண்பர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கு பிரதமர் உதவி செய்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி. இது தேர்தல் - அதிகார அரசியலைத் தாண்டிய குற்றச்சாட்டுகள் ஆகும்.

இப்படி ராகுல் பேசலாமா என்று சிலர் விமர்சித்தார்கள். ராகுல் நடைபயணம் முடியும் நேரத்தில் தான் அதானிகளின் முகம் அம்பலப்பட்டு இருக்கிறது. ராகுல் உண்மையைத்தான் பேசியிருக்கிறார் என்பதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் ராகுலின் பயணம், அனைத்து வகையிலும் வெற்றிப்பயணமாக அமைந்துள்ளது.

“சரியும் அதானியின் சந்தையும்; பாஜகவின் பிம்பமும்.. இந்தியர்களை ஏமாற்றியது தேசவிரோதம் இல்லையா?” : முரசொலி!
அரசியல் :
×
facebook twitter