+

"விவசாயிகளை கொன்ற ஆஷிஷ் மிஸ்ராவைப்போல பிரிஜ் பூசனை விடமாட்டோம்" -மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆவேசம் !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.

அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். ஆனால் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததால் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர்.

ஆனால், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜகவை சேர்ந்த ஆஷிஷ் மிஸ்ராவைப்போல விட்டதுபோல பிரிஜ் பூசனை விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.

ஹரியானாவில் விவசாயிகள் நடத்திய மகாபஞ்சாயத்தில் கலந்துகொண்ட மல்யுத்த வீரர் பிரிஜ் பூஷன் தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், விவசாயிகள் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 விவசாயிகளை கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதை போல பிரிஜ் பூஷன் விவகாரத்திலும் இருக்கமுடியாது, அவர் மேல் நடவடிக்கை எடுக்கும்வரை விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

Trending :
×
facebook twitter