+

“செங்கோல் கொடுத்ததாக ஆதாரம் இல்லை.. அது கட்டுக்கதை” : மோடி கும்பலின் புரூடா’வுக்கு இந்து என்.ராம் பதிலடி!

சென்னை அண்ணா சாலை உள்ள காமராஜர் அரங்கத்தில் தேசிய சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளரும் என்.ராம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, செங்கோல் என்பது ஒரு பெருமையான விஷயம் இல்லை. மன்னர் ஆட்சி நீக்கி மக்கள் ஆட்சி வந்த உடன் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் மோடி மீண்டும் மன்னர் ஆட்சி கொண்டு வருவதற்கு இந்த செங்கோல் எடுத்து வருகிறார். சோழ, சேர, பாண்டியர் தாயரித்த செங்கோல் இல்லை அது உம்மீடி பங்காரு செட்டியார் செய்தது.

செங்கோல் பெருமைக்குரிய விஷயம் அல்ல. மன்னராட்சி நீக்கி மக்களாட்சி வந்துவிட்டது. ஆனால் பிரதமர் மீண்டும் மன்னராட்சி வர வேண்டும் என செங்கோல் கொண்டு வந்து இருக்கிறார். இந்த செயலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது" என தெரிவித்தார்.

அதனை தொடந்து பேசிய என்.ராம், “செங்கோல் பற்றி பல கட்டு கதைகள் வந்து உள்ளது. தற்போது நடிகர்கள் வைத்து நடித்து இந்த கட்டு கதையை அரசு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். சுதந்திரம் பெற்றதாக எப்படி அடையாளப்படுத்தலாம் என மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாக எந்த குறிப்பு இல்லை.

1947 ஆகஸ்ட் 14 அன்று மவுண்ட்பேட்டன் கராச்சியில் இருந்தார். இது தொடர்பாக நாளிதழில் வெளிவந்து இருக்கிறது. அன்றைய தினம் அவர் நேருவை சந்திக்கவில்லை. அதேபோல் அதிகார மாற்றம் நிகழ்வாக எதுவும் செய்யவில்லை. ஆதினங்கள் விமானத்தில் செல்லவில்லை. ரயிலில் தான் சென்றதாக புகைப்படத்துடன் இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது. இவர்கள் தான் அதிகார மாற்றத்திற்காக கொடுக்கப்பட்டதாக சொல்லிக் கொள்கின்றனர்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி நேருவை சந்திப்பதற்கு முன்பாக மவுண்ட் பேட்டன் ஆதினங்களை சந்திக்க வாய்ப்பில்லை. செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து அதை அவர் நேருவிடம் கொடுக்க சொன்னதாக சொல்வது அனைத்தும் கட்டுக்கதை. ராஜாஜிக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நடக்காத நிகழ்வை நடந்ததாக சொல்வதற்கு இந்துத்துவாதான் காரணம்.

பிரதமராக பதவி ஏற்பு என்பது முக்கிய நிகழ்வு அன்று பல பரிசுகள் நேருவின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒன்றுதான் செங்கோல். அதனால் தான் அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அங்கு கோல்டன் ஸ்டிக் என்றுதான் உள்ளது. அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுத்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை" என தெரிவித்தார்.

Trending :
×
facebook twitter